மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அக்னிபத் திட்டம் என்றால் என்ன?
இந்திய ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ சேவை செய்வதற்கான “அக்னிபாத் திட்டம்” மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர இளைஞர்கள், பெண்கள் 18வயது முதல் 21 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். வழக்கமான ராணுவ உடற்தகுதி நிர்ணயங்களே அக்னிபாத் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும்.
இந்த திட்டத்தின் கீழ் பணிபுரியும் வீரர்களுக்கு முதல் ஆண்டில் ரூ.4.76 லட்சம் ஆண்டு ஊதியமும், 4வது ஆண்டில் 6.92 லட்சம் ஆண்டு ஊதியமாகவும் வழங்கப்படும். 4 ஆண்டுகளை முழுவதுமாக முடிக்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு சேவை நிதியாக தலா ரூ.11.7 லட்சம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 21 வரை என்று கூறப்பட்டிருந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2022 ஆம் ஆண்டு நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகோ அறிக்கை:
அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்திய ராணுவத்தின் தரைப் படை, கடற்படை, வான்படைக்கு வீரர்களை தேர்வு செய்வதற்காக, அக்னிபாத் என்ற புதிய திட்டத்திற்கு, பாஜக அரசின் அமைச்சரவை, ஒப்புதல் அளித்து உள்ளது.
ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை இந்தியப் படையில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்காமல், 4 ஆண்டுகளில் தூக்கி வீசுகின்ற நடைமுறை, ராணுவத்தின் மதிப்பையும், மரியாதையையும் குறைத்து விடும். 4 ஆண்டுகள் படைப்பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு, அதன்பிறகு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாக ஆகி விடும்.
இந்த திட்டத்தால், இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்தமான எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதை பாஜக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே அக்னிபாத் திட்டத்தைத் திரும்ப பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.