தமிழ்நாட்டில் கோடைக்கால வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி வீசி வருகிறது. மக்கள் மதிய நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று வட தமிழக மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளிலும், புதுவை காரைக்கால் பகுதியிலும் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை ஏப்ரல் 12ம் தேதி தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக் கூடும்.
ஏப்ரல் 13ம் தேதி வட தமிழக மாவட்டங்களில் சில பகுதிகளில் லேசான மழையும், மேகமூட்டமான சூழலும் நிலவும். ஏப்ரல் 15 மற்றும் 16ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஏப்ரல் 17ம் தேதியில் பெரும்பான்மையான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி முதல் குறைந்தபட்சம் 27 டிகிரி வரை வெப்பநிலை நிலவும் என கூறப்பட்டுள்ளது.