திருவள்ளூர் மாவட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதை அடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசை கண்டித்து இன்று திமுக பல்வேறு நகரங்களில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த இருக்கின்ற நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்வர் மற்றும் துணை முதல்வர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதால், அவர்களுக்கு கட்-அவுட் வைக்கப்பட்டது. குறிப்பாக, உதயநிதி ஸ்டாலினை வரவேற்க 25 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்டிருந்த நிலையில், அது திடீரென சரிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில், ஒரு ஆட்டோ ஓட்டுனர் மீது கட்-அவுட் விழுந்ததுடன், அதிர்ஷ்டவசமாக அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, அனுமதி இன்றி கட்-அவுட் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, திமுக நிகழ்ச்சிகளில் பிளக்ஸ், பேனர்கள், கட்-அவுட் வைக்கக் கூடாது என திமுக தலைமை உத்தரவிட்டிருந்தும், தொடர்ந்து அந்த உத்தரவு மீறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.