உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது தொடர்பாக நாளைக்கே கூட அறிவிப்பு வெளியாகலாம் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 2022ஆம் ஆண்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, உதயநிதியை துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினும் திமுக மூத்த நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஒரு சில நாட்களுக்குள் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கபடுவார் என தெரிவித்தார். ஏன் நாளைக்கே கூட இதுகுறித்து அறிவிக்கப்படலாம் என்று குறிப்பிட்டார்.
10 நாட்களுக்குள் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்பார் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் உறுதியாகி உள்ளது.