முசிறியில் நகைக்கடை ஒன்றில் நகை திருடப்பட்டதை கடைக்காரர் கண்டுபிடிக்கும் முன்னரே போலீஸ் கண்டுபிடித்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சிக்கு அருகே உள்ள முசிறியில் பேருந்து நிறுத்தம் அருகே போலீஸார் ரோந்து சென்று கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது அங்கே இரண்டு பெண்கள் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தனர். உடனே அவர்களை அழைத்து விசாரித்திருக்கின்றனர் போலீஸ். அப்போது போலீஸ் கேட்ட கேள்விகளுக்கு இருவரும் ஆளுக்கொரு பதிலை சொல்லியிருக்கின்றனர். சந்தேகமடைந்த போலீஸ் அவர்களை சோதித்தபோது பாவாடைக்குள் உள் பை ஒன்றில் 15 கொலுசுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக அவர்களை காவல்துறைக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இரு பெண்களும் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் முசிறியில் உள்ள ஒரு நகைக்கடையில் நகை வாங்குவது போல சென்று கடைக்காரர் கவனிக்காத நேரம் பார்த்து இந்த 15 கொலுசுகளையும் திருடியதாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அவர்கள் வாக்குமூலத்தை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நகைக்கடையை தொடர்பு கொண்டுள்ளனர் போலீஸார். அப்போதுதான் அந்த நகைக்கடைக்காரரே நகை திருட்டு போயுள்ளதை கவனித்துள்ளார். அதற்கு பிறகு அந்த பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.