ரயில் நிலையத்தில் முன்பதிவு படிவத்தில் தமிழுக்கு பதில் மலையாளம் இருந்ததால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.
ரயில்வே முன்பதிவு படிவங்களில் ஒருபக்கம் ஆங்கிலம் மற்றும் இந்தியிலும், மறுபக்கம் பிராந்திய மொழிகளிலும் படிவ விவரங்கள் இடம் பெற்றிருக்கும். அதன்படி தமிழக ரயில் நிலையங்களில் வழங்கப்படும் முன்பதிவு படிவங்களில் தமிழ் மொழியிலேயே படிவ விவரங்கள் இருக்கும்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்பவர்களும் பெரும்பாலும் தமிழிலேயே பூர்த்தி செய்கின்றனர். இந்நிலையில் திருச்சி ரயில் நிலையத்தில் அளிக்கப்பட்ட முன்பதிவு படிவத்தில் தமிழுக்கு பதிலாக மலையாளம் இருந்துள்ளது. இதனால் தமிழ் மட்டுமே தெரிந்த பலர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். முன்பதிவு விண்ணப்பங்கள் சென்னையில் இருந்தே கொண்டு வரப்படுகின்றன. அவர்கள் படிவத்தை தவறுதலாக மாற்றி அனுப்பியிருக்கலாம் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.