“மக்கள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால், அதற்கு மண் வளம் மிகவும் அவசியம்” என்று ஈஷாவின் மண் காப்போம் இயக்கத்தின் நிகழ்ச்சியில் திருச்சி மேயர் திரு. அன்பழகன் அவர்கள் கூறினார்.
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் விதமாகவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாகவும், பாரத பாரம்பரிய நெல் திருவிழா என்ற விழாவை மண் காப்போம் இயக்கம் திருச்சியில் இன்று (ஜூலை 30) ஏற்பாடு செய்தது. எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
இத்திருவிழாவில் திருச்சி மேயர் திரு. அன்பழகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். மேலும், எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியின் இயக்குநர் திரு. மால்முருகன், நிர்வாக மேலாளர் திருமதி. ஸ்ரீதேவி ஆகியோரும் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.
மேயர் அவர்கள் பேசுகையில், “விவசாயத்தை எப்படி பேணி காக்க வேண்டும், மண் வளத்தை எப்படி பேணி காக்க வேண்டும் என்று விளக்கி சொல்லும் நிகழ்ச்சியாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. மக்கள் ஆரோக்கியமாக வாழ மண் வளம் மிகவும் அவசியம். இயற்கை விவசாயம் செய்து மண் வளத்தை பாதுகாத்தால் நோயற்ற வாழ்வு கிடைக்கும்.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவிற்கே விவசாயம் தான் அடிப்படை தேவையாக உள்ளது. இதை உணர்த்து வகையில் பாரத பாரம்பரிய நெல் திருவிழா வை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள ஈஷாவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இவ்விழாவில் சிறப்பு பேச்சாளராக பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர் திருமதி. மேனகா அவர்கள் பேசுகையில், “நான் 13 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்து வருகிறேன். நான் தொழில் தொடங்கும் சமயத்தில் பாரம்பரிய நெல் ரகங்களின் பயன்கள் குறித்து எவ்வித விழிப்புணர்வு இல்லை. ஆனால், இப்போது இது குறித்த விழிப்புணர்வு பெரிய அளவு அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கொரோனா பாதிப்பிக்கு பிறகு மக்கள் ஆரோக்கியத்திற்காக அதிகம் முதலீடு செய்ய தொடங்கி உள்ளார்கள். சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ பயன்கள் குறித்து மக்கள் யூ-டியூப்பில் அதிக தேடி தெரிந்து கொள்கிறார்கள். இது மக்களுக்கு மட்டுமின்றி அதை விளைவிக்கும் விவசாயிக்கும் நன்மை அளிக்கிறது..
என்னுடைய மண் வாசனை நிறுவனத்தின் மூலம் 200-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறேன். அதில் கருப்பு கவுனி மற்றும் பனங்கற்கண்டு பாலுடன் சேர்த்து தயாரிக்கும் ஐஸ்கிரீம் மிக பிரபலமாகிவிட்டது. இந்தியாவில் பாரம்பரிய அரிசியை மூலப்பொருளாக கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கும் ஒரே நிறுவனம் நாங்களாக தான் இருப்போம். சென்னையில் திருமண நிகழ்ச்சிகள், பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் ஆர்டர் எடுத்து கருப்பு கவுனி ஐஸ்கிரீமை விற்பனை செய்கிறோம். இதேபோல், ஒவ்வொரு விவசாயியும் மக்களின் தேவை அறிந்து பாரம்பரிய நெல் ரகங்களை மதிப்பு கூட்டி விற்றால் நல்ல லாபம பார்க்கலாம்” என கூறினார்.
மதுரையைச் சேர்ந்த தான்யாஸ் என்ற இயற்கை உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திரு. தினேஷ் மணி பேசுகையில், “விவசாயிகள் நெல்லாகவோ, அரிசியாகவோ வைத்து இருந்தால் அதை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது. ஆனால், அதை சத்து மாவாகவோ அல்லது வேறு வகையான மதிப்பு கூட்டுதல் பொருளாக மாற்றினால் நீண்ட காலம் வைத்து விற்பனை செய்ய முடியும். இதனால், கெட்டுப் போய்விடும் என்ற பயத்தில் குறைந்த விலைக்கு உடனே விற்க வேண்டிய கட்டாயம் இல்லை.
மேலும், நெல்லாக விற்காமல் அரிசியாக விற்றால் அதில் கூடுதல் லாபம் கிடைக்கும். அதை தாண்டி, தோசை மிக்ஸ், பொங்கல் மிக்ஸ், சத்து மாவு போன்ற வகைகளில் நன்கு பேக்கிங் செய்தால் அதைவிட கூடுதல் லாபம் கிடைக்கும்.” என்றார்.
இதேபோல் முன்னோடி பாரம்பரிய நெல் விவசாயி திரு. விஜய் மகேஷ் பேசுகையில், “இயற்கை விவசாயத்தில் லாபம் எடுக்க வேண்டுமென்றால், இயற்கை இடுப்பொருட்களை தாங்கள் சரியான சமயத்தில் தயாரித்து வைத்து கொள்ள வேண்டும். வேறு யாரிடமும் இடுப்பொருட்களை கடன் கேட்கும் பழக்கத்தை அறவே தவிர்க்க வேண்டும்” என்றார்.
இவ்விழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முன்னோடி நெல் விவசாயிகளும் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். பிரபல பூச்சியியல் வல்லுநர் திரு. பூச்சி செல்வம் அவர்கள் பூச்சி மேலாண்மை குறித்து, உணவு மருத்துவ நிபுணர் திரு. ஹீலர் சக்திவேல் பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ குணங்கள் குறித்தும் பேசினர்.
மேலும், நடவு முதல் அறுவடை வரை விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சி, பாரம்பரிய விதைகள் கண்காட்சி உட்பட பல்வேறு அம்சங்கள் விவசாயிகளை கவர்ந்தன. வேளாண் கருவிகளை கண்டறிந்த விவசாயிகளுக்கு மண் காப்போம் இயக்கம் சார்பில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. முன்னதாக, மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துக்குமார் திட்ட விளக்க உரையாற்றினார்.