கவரைப்பேட்டையில் மைசூர் - தர்பங்கா ரயில் விபத்துக்குள்ளானதற்கு தவறான சிக்னலே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கி செல்லும் பாக்மதி விரைவு ரயில் (12578) பெரம்பூரில் இருந்து இரவு 7.44 மணி அளவில் புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தது. 8.27 மணி அளவில் திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே ரயில் சென்றுக் கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் நின்ற சரக்கு ரயிலின் பின்புறத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. மீட்பு படையினர், பொதுமக்கள் சேர்ந்து ரயில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி வருகின்றனர்.
இந்த விபத்திற்கு தவறான சிக்னல் அளிக்கப்பட்டதே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இரவு 8.27 மணியளவில் பச்சை சிக்னல் கொடுக்கப்பட்டதால் ரயில் இயக்கப்பட்டதாகவும், 109 கி.மீ வேகத்தில் சென்ற ரயிலை லோகோ பைலட் லூப் லைனில் செல்லும்போது 90 கி.மீ வேகத்திற்கு குறைத்ததாகவும் கூறப்படுகிறது.
பிரதான லைனில் இருந்து லூப் லைன் சென்ற ரயில் அங்கு ஏற்கனவே நின்றிருந்த சரக்கு ரயிலின் பின்புறம் மோதியுள்ளது. இதுகுறித்த விசாரணைகள் தொடங்கியுள்ள நிலையில் மேலதிக தகவல்கள் விரைவில் தெரிய வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K