சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தமிழகத்தில் இருந்து விஐபிக்கள் சென்று பார்த்து வருகின்றனர்.
ஏற்கனவே தமிழகத்தில் ஜெயில் ஆட்சி நடைபெறுகிறது என்று குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில் அதை நிரூபணம் செய்வது போல் அமைச்சர்கள் உள்பட பலர் அடிக்கடி சசிகலாவை சந்தித்து வருவது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் பெங்களூரு சிறைக்கு சசிகலாவை பார்க்க தமிழக அமைச்சர்கள் அடிக்கடி வருவதால்,அவரை தும்கூர் சிறைக்கு மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். சசிகலா இருப்பது ஜெயிலா? அல்லது தலைமைச்செயலகமா? அல்லது சத்திரமா? என்று அவர் கேள்வி கேட்டதாக கூறப்படுகிறது.
டிராபிக் ராமசாமி தனது மனுவில் மேலும் கூறியதாவது: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா நடராஜன்,இளவரசி மற்றும் நடராஜன் ஆகியோர் பெங்களுரூவில் உள்ள பரப்பன அஹ்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் சசிகலாவை பார்ப்பதற்காக தமிழக அமைச்சர்களில் பலர் அடிக்கடி பெங்களூரு வந்து செல்கின்றனர்.இதனால் தமிழக மக்களின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுகிறது.
எனவே தமிழக அமைச்சர்கள் சசிகலாவை பார்க்க வருவதை தவிர்க்க,அவரை தும்கூரில் உள்ள மத்திய சிறைக்கு மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.