அதிமுகவின் பேனர் பிரச்சனையை தடுக்க போய் டிராபிக் ராமசாமி மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் அதிமுக மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று அதிமுக அலுவலகத்தில் நடக்கிறது. இதற்காக அதிமுக அலுவலம் முன்பாக ஏகப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதுபற்றி அறிந்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த பேனர்களை அகற்றுமாறு சொல்லி பேனர்களுக்கு கீழே அமர்ந்து போராட்டம், நடத்தினார். உடனடியாக அங்கு வந்த காவலர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டிராஃபிக் ராமசாமி மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.
உடனடியாக அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை ஆசுவாசப்படுத்தினர், அவரை காவலர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முற்பட்ட போது, திடீரென மயக்கத்தில் இருந்து முழித்த அவர், என்ன ஏன் யா டாக்டர்ட கூட்டிட்டு போறீங்க? டாக்டர இங்க வர சொல்லுங்க. பேனர எடுக்குர வரைக்கும் இங்க தான் இருப்பேன் என கூறினார்.
அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு போலீஸார் அவரை அலேக்காக தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.