காஞ்சிபுரம் அருகே பூந்தமல்லி போக்குவரத்து தலைமை காவலர் மதுக்கடையில் பாட்டிலை தூக்கி வீசி வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மதுபானக்கடையில் பூந்தமல்லி போக்குவரத்து தலைமை காவலர் முருகனும், அவரது உறவினர் ஒருவரும் மது வாங்க சென்றுள்ளனர். அப்போது முருகனுக்கும் டாஸ்மாக் ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த முருகன் தகாத வார்த்தைகளால் பேசியதோடு மது பாட்டிலையும் தூக்கி கடைக்குள் வீச முயன்றுள்ளார். இதை செல்போனில் வீடியோ எடுத்த மதுக்கடை ஊழியர், காவலர் முருகன் மீது புகார் அளிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
ஆனால் மதுக்கடை ஊழியர் அரசு நிர்ணயித்த விலையை விட மதுப்பாட்டில்களுக்கு கூடுதல் விலை கேட்டதாகவும், அதை ஏன் என விளக்கம் கேட்டதற்கு வாக்குவாதத்தில் அவர்கள் ஈடுபட்டதாகவும் காவலர் முருகன் தரப்பில் கூறப்படுகிறது.