சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், சாலை வழி போக்குவரத்தை தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
வங்க கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை பகுதிகளில் அதிக கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், சாலையின் இருபுறங்களிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் நகர முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், கிழக்கு கடற்கரைச் சாலையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பகுதியில் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், விக்கிரவாண்டி அருகே ஒரு வழி பாதையாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
எனவே, சென்னை-திருச்சி நெடுஞ்சாலை வழியாக செல்லும் பயணிகள் ரயில் அல்லது விமான மூலம் பயணம் செய்து கொள்ளவும், சாலை வழி போக்குவரத்தை தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.