மாமல்லபுரத்தில் வைக்கப்பட்டிருந்த மின்விளக்குகள் அனைத்தும் இரவில் எரியாததால் சுற்றுலா பயணிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகிய இருவரும் கடந்த 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்வையிட்டனர். மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய இடங்களில் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இவர்களின் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இரு நாட்டு தலைவர்களும் வந்து சென்ற பின்னர் சுற்றுலா பயணிகள் அனைவரும் மாமல்லபுரத்திறு வருகை தந்தனர். ஆனால், அவர்களுக்கு அதிருப்தி மட்டுமே மிஞ்சியது. ஏனெனில் இரவில் ஒளி விளக்குகளால் அன்று ஒருநாள் மட்டுமே மின்னியது மாமல்லபுரம். மறுநாளில் இருந்து விளக்குகள் அனைத்தும் ஒளிராததால் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த மின்விளக்கு ஏற்பாடுகள் நிரந்தரமாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள், இரவு 9 மணி வரை சுற்றுலா பயணிகள் பார்வையிட மத்திய அரசு அனுமதி வழங்கிய பின்னர் மின்விளக்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.