Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’ஈஷா மையத்தின் சித்ரவதைகள்’ - முன்னாள் உளவுத்துறை காவலர் குமுறல்

’ஈஷா மையத்தின் சித்ரவதைகள்’ - முன்னாள் உளவுத்துறை காவலர் குமுறல்
, திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (12:03 IST)
சேவா என்கிற பெயரில் குழந்தைகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கி குழந்தைகளை மனரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவதாக உளவுத்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற காவலர் குற்றம்சாட்டி உள்ளார்.
 

 
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பிரபல ஆன்மீகவாதியான ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையம் இயங்கி வருகின்றது. ஈஷா யோகா மையத்தில் திருமணமாகாத தனது இரு மகள்கள் கட்டாயப்படுத்தி சன்னியாசிகளாக ஆக்கப்பட்டிருப்பதாக வேளாண்மைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற பேராசிரியர் புகார் அளித்திருந்தார்.
 
தனது இருமகள்களை கட்டாயப்படுத்தி மொட்டையடித்து துறவறம் மேற்கொள்ள வைத்திருப்பதாகவும், அங்குள்ளவர்களுக்கு போதை வஸ்துகள் உட்கொள்ளவைப்பதும், மூளைச்சலவை செய்து சொத்துக்களை எழுதி வாங்குவதாகவும் பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார்.
 
இதனையடுத்து, ஈஷா யோகா மையத்தில் பொள்ளாச்சி பகுதியின் ஒருங்கிணைப்பாளராக 8 ஆண்டுகள் பணியாற்றிய செந்தில் என்பவர், அந்த மையத்தின் மீது பல திடுக்கிடும் புகார்களை தெரிவித்துள்ளார். யோகா மையத்தினர் கூறுவது முற்றிலும் பொய்யானது எனவும் தெரிவித்து இருந்தார்.
 
இந்நிலையில், மதுரை திருப்பாலையம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உளவுத்துறை காவலர் மகேந்திரன் கூறுகையில், ”ஈஷா யோகா மையத்தில் உள்ள சமஸ்கிருத குருகுல பள்ளி குறித்து தொடர்ச்சியாக வந்த செய்திகளால் எனது பிள்ளைகளை அங்கு சேர்க்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தது.
 
இதனையடுத்து எனது மூத்த மகனை 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை ஈஷா யோகா மையத்தில் செலுத்தி 2012ஆம் ஆண்டு சமஸ்கிருத பள்ளியில் சேர்த்தோம். இதனையடுத்து 2014இல் எனது இளைய மகனை ஏழு லட்ச ரூபாய் செலுத்தி அவனையும் சேர்த்தோம்.
 
இந்நிலையில் இரண்டு வருடத்திற்குப் பிறகு ஈஷா யோகா மையத்தில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இதில் உங்கள் மகனின் நடவடிக்கை சரியில்லை அதிக கோபம் வருகிறது, படிப்பு ஏறவில்லை உடனடியாக மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள் என்றனர். எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
 
இதனையடுத்து கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றபோது, குழந்தைகள் மனநல மருத்துவரிடம் கவுன்சிலிங் தரவேண்டும் என்றனர். ஒரு மாதத்திற்கு பிறகு எனது மகனுக்கு கவுன்சிலிங் கொடுத்த மனநல மருத்துவர் உடனடியாக உங்கள் பிள்ளைகளை ஈஷா மையத்தில் இருந்து கூட்டிச் செல்லுங்கள் என்றார்.
 
என்ன காரணம் என மருத்துவரிடம் கேட்டதற்கு ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டார். இதனையடுத்து மதுரைக்குச் சென்று இருவரையும் வேறு பள்ளியில் சேர்த்துவிட்டேன். சிறிது நாட்கள் கழித்தபின் அவர்களாகவே என்னிடம் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சித்ரவதைகள் குறித்து தெரிவித்தனர்.
 
இது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. என்னிடம் லட்சக்கணக்கில் பணமும் பறித்துக்கொண்டு மகன்களையும் கொடுமைப்படுத்திய செயலை ஏற்கமுடியவில்லை. நான் காவல்துறையில் உளவுப்பிரிவில் பணியாற்றி இருப்பதால் அந்த அனுபவத்தோடு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினேன்.
 
ஈஷா யோகா மையத்தினர் என்னிடம் ஒன்பது லட்சம் ரூபாயை தந்துவிட்டு நடந்த சம்பவங்கள் குறித்து வெளியில் சொல்லக்கூடாது எனக் கடிதம் பெற்று சமரசத்திற்கு வந்தனர். கடந்த பல மாதங்களாக எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால் எனது பிள்ளைகள் போல் மற்ற பிள்ளைகளும் பாதிக்கக்கூடாது எனப் பலரிடமும் சொல்லி வந்தேன்.
 
ஆனால் என்னுடைய பேச்சை யாரும் நம்பவில்லை. தற்போது கடந்த ஒருவாரமாக ஈசா யோகா மையத்தின் முறைகேடுகள் வெளிவந்து கொண்டிருக்கிற செய்திகள் எனக்கு பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. ஆகவே, எனது குழந்தைகள் அனுபவித்த வேதனையையும் பதிவு செய்ய வேண்டும். வேறு எந்த குழந்தைகளும் அப்படியான வேதனை அனுபவிக்கக்கூடாது என்கிற நிலையில் இருந்தே மதுரையில் இருந்து சொந்த செலவில் கோவைக்கு வந்துள்ளேன்” என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமேசான் பிரைம் ஏர்: விமான பார்சல் சேவை தொடக்கம்