ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில் இம்மாத கடைசி ஞாயிறான இன்றுடன் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு முடிவுக்கு வரும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்றைய முழு ஊரடங்கில் காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகளை திறக்க அனுமதி இல்லை என்பதும், இறைச்சி உள்ளிட்ட கடைகள் மூடப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பால், மருந்து கடைகளை தவிர்த்து வேறு எந்த கடைகளும் திறக்கக்கூடாது என்றும், மக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வரக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வழக்கம்போல் இன்று கடையடைப்பு என்பதால் நேற்றைய தினமே பொது மக்கள் சமூக இடைவெளியின்றி மக்கள் இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளை வாங்கிவிட்டனர். இந்த நிலையில் செப்டம்பர் மாதம் முதல் எந்த மாநிலமும் நோய் கட்டுப்பாட்டு பகுதி இல்லாத இடங்களில் முழு ஊரடங்கை அறிவிக்கக் கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளதால் அனேகமாக இன்று தான் கடைசி தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு
என எதிர்பார்க்கப்படுகிறது.