அத்திவரதரை தரிசிக்க இன்றே கடைசி நாள் என்பதால் காஞ்சிபுரமே மக்கள் கூட்டமாக நிரம்பி வழிகிறது.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசனம் நடைபெறுகிறது. கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கிய அத்திவரதர் தரிசனம் இன்று வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
48 நாட்கள் நடைபெறும் தரிசனத்தில் அத்திவரதர் 31 நாட்களுக்கு சயனக்கோலத்திலும், 17 நாட்களுக்கு நின்ற திருக்கோலத்திலும் காட்சி தருவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நாள் அத்திவரதருக்கு ஆகம விதிகள்படி பூஜைகள் செய்து குளத்திற்குள் வைக்க வேண்டும் என்பதால் கடைசிநாள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
சயனக்கோலத்தில் காட்சியளித்த அத்திவரதரை தரிசிக்க 31 நாட்களில் மொத்தமாக 50 லட்சம் பக்தர்கள் வருகை புரிந்தனர். அதேசமயம் நின்ற திருக்கோல தரிசனத்தை காண 17 நாட்களிலேயே 50 லட்சம் பேர் குவிந்துள்ளனர். சயனக்கோல தரிசனத்தை கண்டவர்கள் நின்ற கோல தரிசனத்தையும் காண வருகை புரிகிறார்கள்.
நேற்று காலை 5 மணிக்கே அத்திவரதரை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடிவிட்டனர். நேற்று வரதராஜ பெருமாளுக்கு கருட சேவை நடைபெற்றதால் அத்திவரதர் தரிசனம் மாலை 5 மணி முதல் 8 மணி வரை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனாலும் பக்தர்கள் அங்கிருந்து கலையாமால் 8 மணிக்குமேல் அத்திவரதரை தரிசிக்க காத்திருந்தார்கள். 8 மணிக்கு தொடங்கிய அத்திவரதர் தரிசனம் இரவு 2 மணி வரை நடைபெற்றது.
இந்நிலையில் இன்று கடைசி நாள் என்பதாலும், இன்று விட்டால் அத்திவரதரை தரிசிக்க இன்னும் 40 வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பதாலும் மக்கள் காஞ்சிபுரம் நோக்கி படையெடுத்துள்ளனர். இன்று அதிகாலை 4.30க்கு அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.
இன்று கடைசிநாள் என்பதால் காஞ்சிபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விஐபி, விவிஐபி தரிசன வாயில்கள் மூடப்பட்டு அனைவரும் பொது வழியிலேயே அனுப்பப்படுகின்றனர். அனைத்து பக்தர்களும் தரிசித்து முடித்த பிறகே தரிசனம் முடிவடையும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருப்பதால் நள்ளிரவு ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.