அவசர சட்டம்; முதல்வர் தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்!
அவசர சட்டம்; முதல்வர் தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டம் காரணமாக தமிழக அரசு ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர உள்ளதாக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று உறுதியளித்தார்.
டெல்லி சென்று ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக மக்களின் கோரிக்கையை பிரதம் மோடியிடம் வைத்தார் தமிழக முதல்வர். ஆனால் ஜல்லிக்கட்டு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மத்திய அரசால் எதுவும் செய்ய முடியாது எனவும் ஆனால் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு துணையாக இருப்போம் என பிரதமர் கூறினார்.
இதனையடுத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அவசர சட்டம் தயாராக உள்ளதாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இதனையடுத்து அவசர சட்டம் குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று மாலை நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அனுமதியளித்தபின் ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு நடத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த அவசர அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.