சட்டமன்ற மரபையே உடைத்துவிட்டது மாணவர்கள் போராட்டம்!
சட்டமன்ற மரபையே உடைத்துவிட்டது மாணவர்கள் போராட்டம்!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் கொண்டு வர மாணவர்கள் செய்த புரட்சி போராட்டம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. ஆனால் இந்திய வரலாற்றிலேயே ஒரு மாநில சட்டமன்றம் மீறாத மரபை தமிழக சட்டமன்றம் மாணவர்கள் போராட்டத்தின் நெருக்கடியால் மீறியுள்ளது எத்தனை பேருக்கு தெரியும்.
இந்த ஆண்டில் முதன் முதலாக கூடிய தமிழக சட்டமன்றம் முதல் நாளிலேயே ஜல்லிக்கட்டு நடத்த கொண்டு வந்த அவசர சட்டத்தை சட்டமாக இயற்றியது. இதனால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டது என கூறப்படுகிறது.
இதில் சட்டமன்றத்தின் மரபு மீறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சட்ட மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யும் முன்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே அச்சிட்டு புத்தகமாக வழங்குவார்கள். ஆனால் சட்டமன்றத்தில் விவாதம் செய்யும் முன்னர் பொது மக்களுக்கும், ஊடகத்திற்கும் வெளியிடுவது சட்டமன்ற மரபினை மீறிய செயலாகவும். அது சட்டமன்ற அவமதிப்பும் கூட.
ஆனால் ஜல்லிக்கட்டு வரைவு சட்ட மசோதாவை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு முன்னர் மெரினாவில் மாணவர்கள் பார்ப்பதற்காக தமிழக அரசு அனுமதியுடன் காவல் துறை இணை ஆணையர் வெளியிட்டார்.
மேலும் ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரைதான் சட்டமன்றத்தின் முதல் நிகழ்வாக இருக்க வேண்டும். அதன் பின்னர் தான் புதிய சட்டமன்ற கூட்ட தொடர் துவங்கும். ஆளுனர் உரையுடம் மட்டுமே அன்றைய தின சட்டமன்ற கூட்டம் முடிந்து விடும். வேறு எந்த சட்டமன்ற அலுவலும் அன்று இருக்காது.
ஆளுநர் உரைக்கு அடுத்த நாள் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் அஞ்சலி செய்யும் நாள். பின்னர் சட்டமன்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முதல் விசயமாக ஆளுநர் உரைக்கு நன்றி அறிவிக்கும் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்வார்கள். அதன் பிறகுதான் மற்ற நிகழ்வுகள் அனைத்தும் இருக்க வேண்டும். இதுதான் சட்டமன்ற மரபுகள்.
ஆனால் மாணவர்கள் போராட்டத்தின் நெருக்கடியால் ஆளுநர் உரைக்கு நன்றி அறிவிக்கும் முன்னரே சிறப்பு கூட்டத்தை அன்று மாலையிலேயே கூட்டியது இதுவே முதல்முறை. மறைந்த முதல்வருக்கு அஞ்சலி கூட செலுத்தாமல் ஒரு மாநில சட்டமன்றம் ஒரு விசயத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டதும் இந்தியாவிலே இது தான் முதல்முறை. மாணவர்களின் போராட்டத்தால் தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக சட்டமன்ற மரபுகள் உடைக்கப்பட்டுள்ளது.