வங்கக்கடலில் புயல் சின்னம் தோன்றி உள்ளதை அடுத்து 14 மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு அவசர கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று டிசம்பர் மூன்றாம் தேதி புயலாக மாற அதிக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
எனவே சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 14 கடலோர மாவட்டங்களில் கலெக்டர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர்கள் அந்தந்த மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே கடலுக்குள் சென்ற மீனவர்களுக்கு கரை திரும்பியதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கடலுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் 14 மாவட்ட கலெக்டர்களுக்கு இந்த அவசர கடிதம் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது