15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் இன்றும் நாளையும் 10 தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் சுமார் 20 கோடி பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் பேருந்துகள் ஓடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அகில இந்திய அளவில் நடைபெறும் இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டால் சம்பள பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தமிழகத்தை பொருத்தவரை பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் தமிழக அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது
இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் வங்கி ஊழியர்கள் கலந்து கொள்ள இருப்பதால் அறிவித்துள்ளதால், தமிழகத்தில் வங்கிச்சேவை இரண்டு நாட்களுக்கு பாதிக்கும் என்றும், பொதுமக்கள் ஏடிஎம்-இல் தேவையான பணத்தை எடுத்து வைத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
மத்திய அரசு புதிய வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், தொழிலாளர்கள் நலனில் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளாமல் இருக்க வேண்டும், பொதுத்துறைகளை பாதுகாக்க வேண்டும், மோட்டார் வாகன சட்டத்தை திருத்த கூடாது, போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதி வழங்க வேண்டும் என்பது உள்பட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.