தமிழக அரசின் உத்தரவை மீறி செயல்படும் பள்ளி, கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அரசின் உத்தரவை மீறி திண்டுக்கல் மாவட்டத்தில் சில பள்ளிகள் 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துவதாக தகவல்கள் வெளியானது. அதை தொடர்ந்து அந்த பள்ளிகளை ஆய்வு செய்த முதன்மை கல்வி அலுவலர் அங்கிருந்த மாணவர்களை வீட்டுக்கு அனுப்பியதோடு, பள்ளி நிர்வாகத்திற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.