சென்னையை சேர்ந்த திருதணிகாசலம் என்பவர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறி வதந்தியைப் பரப்பிய நிலையில் கைது செய்யப்பட்டார்.
சீனாவில் இருந்து பரவிய கொரொனா வைரஸ் பல்வேறு உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் மூன்றாது கட்டமாக ஊரடங்கு உத்தரவு இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் அன்றாடமும் கொரொனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக கோயம்பேடு சந்தை மூலமாக பலருக்கும் கொரொனா பரவி வருகிறது.
இந்நிலையில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக திருதணிகாசலம் என்பவர் சமூகவலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஆனால் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி மருத்துவர் என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது அரசு தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகார் குறித்து போலீஸார் முதற்கட்ட விசாரணை நடவடிக்கை எடுத்தனர். இதன் விளைவாக தற்போது அந்த சித்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு விண்ணப்பித்த அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியிருந்தார். ஆனால் இம்முறையும் அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.