திருநெல்வேலியில் மதுபானத்திற்கு கூடுதல் பணம் வசூலித்த டாஸ்மாக் கடையை கண்டித்து மதுப்பிரியர் ஒருவர் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசின் டாஸ்மாக் கடைகள் பல இடங்களில் செயல்பட்டு வரும் நிலையில் நிர்ணயித்த விலையை விட அதிகவிலைக்கு மதுபானங்கள் விற்கப்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகின்றன. ஒரு ஃபுல் கேட்டு போனால் 4 குவாட்டர்களை கொடுத்து பாட்டிலுக்கு ரூ.5 முதல் 10 வரை விலையை கூட்டுவது, கூலிங் பீருக்கு கூடுதல் கட்டணம் என பல கடைகளில் நடந்து வருவதாக அடிக்கடி மதுப்பிரியர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலி நயினார்குளம் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக்கில் தொழிலாளிஒருவர் மது வாங்க சென்றுள்ளார். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படவே ஆத்திரமடைந்த மது பிரியர் அருகே இருந்த சாலையின் நடுவே அமர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளார். இந்த அநியாயத்தை தட்டி கேட்பேன் என அவர் சாலையிலேயே படுத்துவிட்டதால் வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை சாமாதனப்படுத்தி அழைத்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரங்கள் பரபரப்பு எழுந்துள்ளது.