தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியது.
தீபாவளி பண்டிகை வரும் 29ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் பணியாற்றும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் வசதிக்காக அரசு பேருந்து கழகம் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செல்ல 21 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளிக்கு சில தினங்களே உள்ள நிலையில் மக்கள் பேருந்துகளில் முன்பதிவு செய்ய ஆயத்தம் ஆகிவருகின்றனர். இதையடுத்து அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் முன்பதிவு மையங்களுக்கு சென்றும் தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
வழக்கமான முன்பதிவு மையங்களை தவிர கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் சானடோரியம் ஆகிய பேருந்து நிலையங்களில் சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.