இரண்டு வயது குழந்தையை தாய் தாக்கிய விவகாரத்தில் தாய் துளசிக்கு மனநல பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள மணலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன். கூலி தொழிலாளியான இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த துளசி என்பவருக்கும் கடந்த 2016ம் ஆண்டில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி துளதி தனது குழந்தையை கொடூரமாக தாக்குவதும், அதை தனது செல்போனில் வீடியோ எடுப்பதுமாக இருந்துள்ளார். ஒருநாள் எதேச்சையாக துளசியின் செல்போனை எடுத்து பார்த்த வடிவழகன் குழந்தையை மூர்க்கமாக தாக்கும் வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனால் குழந்தையை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்ட வடிவழகன் துளசியை ஆந்திராவுக்கே அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் குழந்தையை துளசி அடித்து துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் துளசியை விசாரணைக்காக ஆந்திராவிலிருந்து அழைத்து வந்துள்ளனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் துளசிக்கு மனநல பாதிப்பு எதுவும் இல்லையென்று தெரிவித்துள்ளனர்.