பொள்ளாச்சியில் பேஸ்புக் மூலம் பெண்களிடம் பழகி ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் தேடப்பட்ட திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார்.
பொள்ளாச்சியில் ஒரு கும்பல் ஏராளமான பெண்களை ஃபேஸ்புக் மூலம் நட்பாக பழகி காதல் வலையில் வீழ்த்தி ஆபாச படம் எடுத்து நகைப் பறிப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த வழககில் 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு தான் என்பது தெரியவந்தது.
200க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தது தெரியவந்தது. இதனால் திருநாவுக்கரசு தலைமறைவாக சுற்றி வந்தார். அவரை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொள்ளாச்சியில் போராட்டங்கள் நடந்தது. திருநாவுக்கரசை கைது செய்வதில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகவும் புகார் எழுந்தது. இதனை பொள்ளாச்சி போலீசார் திட்டவட்டமாக மறுத்தனர்.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன் ஆடியோ ஒன்றை திருநாவுக்கரசு வெளியிட்டிருந்தார். அதில் பெண்களை மயக்கி ஆபாச வீடியோ எடுத்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் புகார் அளித்த பெண் மட்டுமே போலீசுக்கு ஆதரவாக இருப்பதாகவும் மற்ற பெண்கள் தனக்கு ஆதரவாகவே இருப்பதாகவும் கூறியிருந்தார்.
தொடர்ந்து திங்கட்கிழமை வீடியோ ஒன்றை வெளியிட்ட திருநாவுக்கரசு, தாம் தவறு செய்திருந்தால் சம்மந்தப்பட்ட பெண்ணே தண்டிக்கட்டும் என்றும் தாம் பொள்ளாச்சி வரவுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் வைத்து திருநாவுக்கரசுவை போலீசார் கைது செய்தனர். திருநாவுக்கரசிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.