தொடர்ந்து 45 நாட்களாக சிறையில் இருக்கும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணப்பாளர் திருமுருகன் காந்தியின் உடல் நிலையில் குறைபாடு ஏற்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஜெர்மனியில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணையத்தில் பேசியதை அடுத்து இந்தியாவிறகு வந்த திருமுருகன் காந்தியை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட அவர்மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் பல்வேறு ஊர்களில் போலீஸார் வழக்கு பதிந்தனர். மேலும் தீவிரவாதிகள் மீது தொடுக்கப்படும் ஊபா எனும் பிணையில்லா பிரிவின் கீழும் வழக்குத் தொடர்ந்தனர். எனினும் நீதிமன்றம் அவரை ஊபா பிரிவிலிருந்து விடுவித்தது. பிற வழக்குகளுக்காக அவர் தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போலீஸ் அவரை தனிமை சிறையில் வைத்துள்ளதாகவும், அவர் தனக்காகக் கேட்ட மருத்துவ பரிசோதனைகளை செய்யாமல் தட்டி கழிப்பதாகவும் மற்றும் சிறையில் தரப்படும் சுகாதாரமற்ற உணவு ஆகியவற்றால் அவருக்கு தற்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தற்போது வேலூரை அடுத்த அடுக்கம்பாறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சமூகவலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.