தமிழினத்தின் முதுபெரும் தலைவருமான சமத்துவப் பெரியார் கலைஞர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’3-6-2016 அன்று 93ஆம் பிறந்த நாள் காணும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழினத்தின் முதுபெரும் தலைவருமான சமத்துவப் பெரியார் கலைஞர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த 80 ஆண்டுகளாக அரசியல் களத்தில் மட்டுமின்றி சமூகம், கலை, இலக்கியம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு மகத்தானது. 92 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையிலும் ஓய்வின்றி உழைக்கும் அவரது ஆளுமை வியப்புக்குரியது.
நடந்தேறிய சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டு மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மட்டுமின்றி, தமிழகம் தழுவிய அளவில் பரப்புரையாற்றியது, அவருடைய மனவலிமை எத்தகைய ஆற்றல் வாய்ந்தது என்பதை எடுத்துக்காட்டியது.
நேர்மறையான சிந்தனைகளும் அணுகுமுறைகளும்தாம் அவரது வெற்றிக்கு அடிப்படையானவை என்பதையும் காண முடிகிறது. இத்தகைய பேராளுமை கொண்ட கலைஞர் அவர்களின் அளப்பரிய பணிகள் மென்மேலும் தொடர, அவர் நூறாண்டுக்கும் மேல் நீடூழி வாழ வேண்டுமென நெஞ்சார வாழ்த்துகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.