இந்திய அரசியலில் ஒரு காமெடியன் திருமாவளவன் என சிதம்பரத்தில் அண்ணாமலை பேசியது குறித்து திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெறும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் கடந்த தேர்தலில் வென்று எம்.பியான நிலையில் இந்த தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து அதிமுகவிலிருந்து சந்திரஹாசனும், பாஜகவிலிருந்து கார்த்தியாயினியும் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக சிதம்பரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர் “இந்திய அரசியலில் திருமாவளவன் ஒரு காமெடியனாகவே பார்க்கப்படுகிறார். இந்த சிதம்பரம் தொகுதியை சுற்றி வாருங்கள். இதில் எம்.பியாக திருமாவளவன் செய்த நல்ல திட்டங்கள் நான்கையாவது சுட்டிக்காட்டுங்கள் பார்க்கலாம்” என பேசியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள தொல்.திருமாவளவன் “தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று விட வேண்டும் என்ற நிலையில் அண்ணாமலை வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். நான் சிதம்பரம் தொகுதி எம்.பியாக என்னென்ன செய்திருக்கிறேன் என்பது மக்களுக்கு தெரியும். அதை மக்கள் தேர்தலில் ஓட்டுகளாக நிரூபித்து காட்டுவார்கள். வடமாநில மக்களை முட்டாளாக்குவது போல தமிழ்நாட்டு மக்களை முட்டாள்களாக்கி விடலாம் என பாஜக கனவு கண்டால் அது நடக்காது” என்று கூறியுள்ளார்.