Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

Advertiesment
TVK Vijay

Prasanth Karthick

, ஞாயிறு, 25 மே 2025 (16:04 IST)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துக் கொண்டது குறித்து விமர்சித்து தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், மாநிலத்தை ஆளுகின்ற ஊழல் கபடதாரி தி.மு.க. அரசியல் எதிரி என்றும். ஒன்றியத்தை ஆளுகின்ற பிளவுவாத பா.ஜ.க. கொள்கை எதிரி என்றும் தீர்க்கமாக அறிவித்திருந்தோம். ஆட்சியில் இருக்கும் இவ்விரு கட்சிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து சுட்டிக் காட்டியும் வருகிறோம்.

 

அ.தி.மு.க. பா.ஜ.க. இடையே பழைய கூட்டணி மீண்டும் புதுப்பிக்கப்பட்ட போதே, தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் உள்ள மறைமுகக் கூட்டணி பற்றியும் நாம் தெரிவித்திருந்தோம். அதே போல், ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும்போது. உடனடியாக அவர் டெல்லிக்குப் பயணம் மேற்கொண்டால். அவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போல அனைத்தும் மறைக்கப்படும் என்பதையும் தெரிவித்திருந்தோம். அதையும் நிரூபிப்பது போலவே அமைச்சர்கள் பலரைத் தொடர்ந்து தற்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் டெல்லிப் பயணம் அமைந்துள்ளது.

 

டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில், கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை நடத்திய ரெய்டைத் தொடர்ந்து, சமீபத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் தி.மு.க. தலைமையின் குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

 

இதற்கிடையே, டாஸ்மாக் மீதான அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடையையும் வாங்கியது. எனினும், இது நிரந்தரத் தடையல்ல என்பதால், எங்கே பேசினால் விசாரணை தடுத்து நிறுத்தப்படுமோ, அங்கே பேசியாக வேண்டிய சூழ்நிலைக்கு, வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தள்ளப்பட்டார். அதற்கேற்றாற்போல அமைந்ததுதான் நிதி ஆயோக் கூட்டம்.

 

சென்ற ஆண்டு இதே நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடந்தபோது அக்கூட்டத்துக்குச் செல்லாமல், தான் செல்லாததற்கான காரணங்களை அடுக்கி. முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு வீடியோ வெளியிட்டார். அப்போது சொன்ன காரணங்கள். இப்போதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படியிருக்க, இம்முறை மட்டும் ஏன் செல்ல வேண்டும்? எல்லாவற்றுக்கும் காரணம், அமலாக்கத் துறை படுத்தும் பாடுதான்!

 

என்றைக்கு இருந்தாலும் அமலாக்கத் துறை நடவடிக்கை. காலைச் சுற்றும் பாம்பு என்பதை உணர்ந்த முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ரூ.1000 கோடி ஊழல் தோண்டி எடுக்கப்பட்டால் தம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் இந்த முறை, நிதி ஆயோக் கூட்டத்தைக் காரணமாக வைத்து டெல்லி சென்றார். பிரதமரையும் வேறு தனியாகச் சந்தித்தார்.

 

உண்மையிலேயே அந்தச் சந்திப்பில், அமலாக்கத் துறை சோதனைகள், வழக்குகள் தொடர்பாகவும் தன் குடும்பத்திற்காகவும் ஒன்றிய அரசின் பிரதமரிடம் எதுவும் பேசவில்லை என்று தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் மனசாட்சியுடன் வெளிப்படையாகக் கூற முடியுமா?

 

அது மட்டுமின்றி, தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள். தங்களிடம் தஞ்சம் அடையத்தான் வருகிறார் என்பது தெரிந்தும், தி.மு.க.வை அரசியல் ரீதியாக. கொள்கை ரீதியாக எதிர்ப்பது உண்மையெனில், பா.ஜ.க.வால் எப்படி இவர்களைக் கொஞ்சிக் குலாவி வரவேற்க இயலும்? நாம் ஏற்கெனவே சொன்னது போல, இதுதான் இவர்கள் இருவருக்குள்ளும் உள்ள மறைமுகக் கூட்டின் வெளிப்பாடு.

 

இச்சூழலில், நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதை உற்று நோக்கினாலே பூனைக்குட்டி வெளியே வந்தது புலப்படும். அந்தப் புகைப்படத்தில்.

 

பா.ஜ.க.வுடன் வெளிப்படையான கூட்டணியில் இருக்கும் ஆந்திர முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள் ஒருபுறம் முன்வரிசையில் நிற்கிறார். அதே முன்வரிசையில் இன்னொரு புறம். தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நிற்கிறார். இதற்கு என்ன பொருள்? ஒருவருக்கு வெளிப்படைக் கூட்டணி என்பதால் முன்வரிசை. இன்னொருவருக்கு மறைமுகக் கூட்டணி என்பதால் முன்வரிசை. இதுதானே உண்மை?

 

இது சாதாரண நிகழ்வு போலத் தோற்றம் கொண்டதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனாலும், தி.மு.க. பா.ஜ.க. இடையிலான மறைமுகக் கூட்டும் பேர அரசியலும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டதையே இது காட்டுகிறது. இதுவே இதன் பின் இருக்கும் மிகப் பெரிய உண்மை.

 

ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சிக்கும் போக்கைக் கண்டித்து, பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்த நிதி ஆயோக் கூட்டத்தை நிராகரித்துள்ளனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?