மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தான் அவமரியாதை செய்யப்பட்டதாக நடிகை நமீதா குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் நமீதா. பிறகு சினிமாவிலிருந்து விலகியபின் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நமீதாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது நமீதா பாஜகவில் முக்கிய பதவியில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தான் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு தனது கணவரோடு சென்றபோது அங்குள்ள காவல் அதிகாரிகளால் அவமானம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “முதல்முறையாக நான் ஒரு இந்துவாக என்னை நிரூபிக்க வேண்டிய சூழல் என் சொந்த நாட்டிலேயே நடந்திருப்பதால் அந்நியமாக உணர்கிறேன். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முக்கிய நபராக தரிசன செய்ய வந்த என்னிடம் நீங்கள் இந்து என்பதற்கான சான்றையும், உங்கள் சாதி என்ன என்பதற்கான சான்றையும் காட்டுங்கள் என கேட்டனர்.
இன்று வரை என்னிடம் யாரும் எப்படி கேட்டதில்லை. நான் ஒரு இந்துவாக பிறந்தவள். என் குழந்தைகளுக்கும் இந்து பெயரைதான் வைத்துள்ளேன். அந்த அதிகாரிக்கு யாரிடம் எப்படி பேச வேண்டும் என தெரியவில்லை. மதிப்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், முக்கிய பிரமுகராக தரிசனம் செய்ய வருபவர்களிடம் விபரங்கள் கேட்கப்பட்டு, தரிசனத்திற்கு அனுப்பப்படுவது நடைமுறை என்றும், அவ்வாறே நமீதாவிடம் விவரங்கள் கேட்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K