சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென இரண்டு காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது தெரிந்ததே. காரணமே இல்லாமல் திடீரென பணியிடமாற்றம் செய்ததால் ஏற்பட்ட மன உளைச்சலே இந்த முடிவுக்கு காரணம் என ரகு, கணேஷ் ஆகிய இரண்டு காவலர்கள் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில் இரண்டு காவலர்கள் குறித்து தேனி மாவட்ட எஸ்பி பாஸ்கரன் கூறிய திடுக்கிடும் தகவல் பின்வருமாறு:
சிறைக் கைதிகளிடம் கஞ்சா சிக்கியது தொடர்பாக சிறைக்கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரகு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. காவலர் கணேஷ் ஒதுக்கப்பட்ட பணிக்கு செல்லாமல் சீருடையுடன் ரேக்ளா ரேஸில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், துறை உத்தரவை மதிக்காமல் இருந்த இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், அவர்கள் ராமநாதபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதனை அடுத்து, அவர்கள் என்னிடம் வந்து எங்களை நீங்கள் பணியிட மாற்றம் செய்ய கூடாது என கூறினர். காவல்துறையிருக்கு எதிராக போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
ரகு, கணேஷ் உள்பட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, மற்ற ஜாதியினரும் இருக்கும் நிலையில், அவர்களை ஜாதி ரீதியாக பிரிப்பதாக கூறப்படும் புகார் பொய்யானது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் அனைத்து மதத்தினரும், ஜாதியினரும் உள்ளது. குறிப்பிட்ட ஜாதியினர் மீது நடவடிக்கை என கூறுவதை ஏற்க முடியாது.
இவ்வாறு தேனி எஸ்பி செய்தியாளர்களிடம் கூறினார்.