தன்னை ஆறு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக தேனி நர்சிங் மாணவி புகார் அளித்த நிலையில், அதன் பின்னர் அந்த புகார் தவறான தகவல் என்று கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தேனி நர்சிங் மாணவி ஒருவர் தன்னை ஆறு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து, காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியது.
நர்சிங் மாணவி வீட்டிலிருந்து கல்லூரிக்கு செல்வதற்காக பேருந்தில் சென்றபோது, திடீரென அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கடத்தியதாகவும், அதன் பின்னர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டதாகவும் அவர் புகாரில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, விசாரணையில், தன்னை யாரும் கடத்தவில்லையெனவும், பாலியல் பலாத்காரம் செய்யவில்லை எனவும், மன அழுத்தம் காரணமாக தவறான புகார் கொடுத்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக திண்டுக்கல் எஸ்பி பிரதீப் தெரிவித்தார்.
இதனை அடுத்து, குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த மாணவிக்கு உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.