சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. ஆட்டோ ஓட்டுனரான இவர் சில நாட்கள் முன்பு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு எண்ணூர் நெடுஞ்சாலை அருகே உள்ள ஒரு முட்புதரில் பிணமாக கிடந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஆர்.கே.நகர் போலீஸார் மூர்த்தி குறித்து அவர் வசித்த பகுதியில் விசாரணை மேற்கொண்டபோது, அதே பகுதியில் வசிக்கும் திருமலை என்பவருக்கும் மூர்த்திக்கும் முன்விரோதம் இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி திருமலையிடம் விசாரிக்க சென்றபோது அவர் வீட்டில் இல்லை. மொபைலிலும் தொடர்பு கொள்ளமுடியவில்லை.
திருமலை மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்படவே அவரை தேட தொடங்கினர். மணலி பகுதியில் திருமலை பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவரி கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் “எனக்கும் மூர்த்திக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. அவர் என்னை கொலை செய்ய திட்டம் போட்டிருந்தார். எனக்கு அது தெரிந்ததும் அவரை கொன்றுவிடலாம் என திட்டம் போட்டேன். என் நண்பர்கள் உதவியோடு மூர்த்தியை மது குடிக்கலாம் என்று சொல்லி ஒரு மைதானத்திற்கு வரவழைத்தோம். அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம். மூர்த்தி நல்ல போதையில் இருந்தபோது அவரை கழுத்தை அறுத்தும், வெட்டியும் கொலை செய்தோம். பிறகு எண்ணூர் நெடுஞ்சாலையின் அருகே இருந்த ஒரு முட்புதரில் வீசிவிட்டோம்” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தையடுத்து அவருக்கு உதவி செய்த அவரது நண்பர்கள் மூன்று பேரையும் கைது செய்த போலீஸார் நான்கு பேரையும் சேர்த்து சிறையில் அடைத்தனர்.