மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் பிரதமர் மோடி இந்த மாதத்தில் மட்டும் 4 நாட்களுக்கும் 3 முறை தமிழ்நாடு வருகிறார்.
மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இப்போதே தேர்தல் ஜுரம் நாடு முழுவதும் பற்றிக் கொள்ள தொடங்கியுள்ளது. பாஜக ஒருபக்கம் மாநில அளவிலான கட்சிகளோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் அதேசமயம், பிரதமர் மோடி மூலமாக பிரச்சார பணிகள் இப்போதே முழு வேகத்தில் தொடங்கிவிடப்பட்டுள்ளது.
ஆர்ட்டிக்கிள் 370 நீக்கத்திற்கு பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி காஷ்மீர் சென்றார். தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவு அதிகம் தேவைப்படும் மாநிலங்களை மையப்படுத்தி சமீபத்திய பிரதமர் மோடியின் பயணங்கள் அமைந்துள்ளன.
அந்த வகையில் வரும் மார்ச் 15 முதல் 19ம் தேதி வரை தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவை சுற்றி பிரதமரின் சுற்றுப்பயணங்கள் அமைந்துள்ளது. இதில் மார்ச் 15 முதல் 18க்குள் நான்கு நாட்களில் 3 நாட்கள் தமிழ்நாட்டில் பிரதமர் மோடியின் பயண திட்டங்கள் அமைந்துள்ளது.
மார்ச் 15 சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும், மார்ச் 16 கன்னியாக்குமரியிலும், மார்ச் 18ம் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொள்கிறார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடியின் தமிழ்நாடு பயணம் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.