ஹெல்மெட் அணியாமல் சென்ற நபரை சாலை வளைவில் திடிரென கையை நீட்டி நிறுத்திய போக்குவரத்து காவலர் - அதிர்ச்சியில் வாகன ஓட்டி தடுமாறி சுவரில் மோதி ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதி
மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் இன்று காலை போக்குவரத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது மதுரை மாநகர் ஆண்டாள்புரம் அக்ரிணி குடியிருப்பு பகுதியை சேர்ந்த அழகு விநாயகர் செல்வம் (49) என்பவர் தனது ஸ்கூட்டியில் மதுரை பைக்காரா பகுதியில் இருந்து ஆண்டாள்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தபோது பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் வாகனங்கள் திரும்பும் பகுதியில் நின்றுகொண்டிருந்த போக்குவரத்து காவலர் கார்த்திக் என்பவர் கையை நீட்டியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத விநாயகர் செல்வம் காவலரின் கை தடுத்த நிலையில் பைக்கை திடிரென வேகமாக இயக்கியநொடியில் நிலைதடுமாறி கீழே விழுந்த இடத்திலயே ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் காயமடைந்து மூச்சு பேச்சின்றி கிடந்த விநாயகர் செல்வத்தை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த பின்னர் அரசு ராஜாஜி விபத்து பிரிவில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
முதற்கட்ட மருத்துவபரிசோதனையில் விநாயகர் செல்வம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தலையில் ரத்த கசிவு ஏற்பட்டு சுயநினைவின்றி இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.
மேலும் மதுரை பழங்காநத்தம் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனை என்றபெயரில் வளைவான சாலையில் நின்றுகொண்டு திடிரென கையை நீட்டியபோது கையில் மோதி தடுமாறி கீழே விழுந்த விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலைக்கு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து காவல்துறையினர் ஆன்லைன் மூலமாக அபராதம் விதிக்கும் நடைமுறையில் இருந்துவரும் நிலையில் இது போன்று வாகன ஓட்டிகளுக்கு தெரியாத வகையில் வளைவான பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலான பகுதிகளிலும் எந்த வித பாதுகாப்பு தடுப்புகள் இன்றி திடிரென மறைப்பதால் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் உயிருக்கும் உரிய பாதுகாப்பு இல்லாத நிலையில் வாகன ஓட்டிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் நிலை தொடர்கிறது.
இந்த சம்பவத்தில் போக்குவரத்து காவல்துறையினர் கையை நீட்டியதால் பைக்கில் இருந்து தடுமாறி விழுந்து காயம் ஏற்பட்டபோது அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போக்குவரத்து காவல்துறையினர் செயலை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பொதுமக்கள் சிலர் காவல்துறை திடீரன மறைந்து நின்று மறித்ததால் தான் கீழே விழுந்து காயமடைந்துவிட்டது என வாக்குவாதம் செய்ய காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து கிளம்புமாறு கூறி அனுப்பினர்.