Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திறனற்ற திமுக அரசு - அண்ணாமலை

வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திறனற்ற திமுக அரசு - அண்ணாமலை
, சனி, 8 ஜூலை 2023 (12:49 IST)
முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நேற்று மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகளை வெளியிட்டிருந்தது. இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ‘’வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திறனற்ற திமுக அரசு’’    என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திறனற்ற திமுக அரசு. தனது தேர்தல் வாக்குறுதியில், அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, சில மாதங்களுக்கு முன்பு, தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று புதிய நிபந்தனை விதித்தது.

நேற்றைய தினம், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகளை திமுக அரசு வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை வழங்க, திமுக எதிர்பார்க்கும் தகுதிகள் என்னென்ன என்று பார்ப்போம்.

குடும்பத்தின் மாத வருமானம் 20,833 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. அதாவது, இவர்கள் கொடுப்பதாகக் கூறிய மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வாங்க, குடும்பத்தில் யாருமே வேலைக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறுவதைப் போல் உள்ளது. தமிழக மக்கள் கடினமான உழைப்பாளிகள். வேலைக்குச் செல்லாமல், டீக்கடை, பஜ்ஜிக் கடை, பிரியாணி கடையில் பாக்ஸிங் செய்து திரிய, தமிழக மக்கள் அனைவரும் திமுகவினர் இல்லை என்பதை, முதலமைச்சருக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

அடுத்த தகுதி, மாதம் 300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தக் கூடாதாம். ஷாக் அடிக்கும் அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி வைத்திருக்கும் திறனற்ற திமுக அரசுக்கு, மின்சாரக் கட்டணம் கட்டவே எளிய மக்களின் பாதி வருமானம் போய் விடுகிறது என்பது தெரியாதா?

தமிழகத்தில் 99.6 லட்ச வீடுகள், 300 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துகிறார்கள் என்று, சென்ற ஆண்டு ஜூன் மாதம், தமிழக அரசு தெரிவித்தது. இந்த 99.6 லட்ச குடும்பங்களிடமும் குடும்ப அட்டை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மாதம் 300 யூனிட்டுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், மாதம் 20,833 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால், அவர்களுக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படாது என்ற விசித்திரமான நிபந்தனையை இட்டுவிட்டு, ஒரு கோடி மகளிர் பயனடைவார்கள் என்று எப்படிக் கூறுகிறார் முதலமைச்சர்?

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மகளிர் உரிமைத் தொகை வழங்க இப்படி எல்லாம் நகைக்கத்தக்க நிபந்தனைகள் விதிப்பதற்குப் பதிலாக, திமுக உறுப்பினர் அட்டை வேண்டும் என்ற நிபந்தனையும் போட்டு இருக்கலாம்.

உங்கள் நிபந்தனைகள் பெரும்பாலும் உங்கள் கட்சியினருக்கு மட்டும்தான் பொருந்துமே தவிர தமிழக மக்களுக்கு அல்ல. நீங்கள் விதித்திருக்கும் நிபந்தனைகளைப் பார்த்தால், தமிழகத்தில் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு, இந்த உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

முதலமைச்சரிடம் ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். தமிழக அமைச்சர்களாகப் பொறுப்பேற்க, குறிப்பிடத்தக்க தகுதிகள் வேண்டும் என்று தமிழக மக்கள் நிபந்தனை விதித்திருந்தால், உங்கள் கட்சியின் நிலைமை என்னவாக இருந்திருக்கும்?’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமித்ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் சந்திப்பு: சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசித்ததாக தகவல்..!