Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவிரி நதிநீர் பிரச்சினை! அனைத்து கட்சி கூட்டத்திற்கு நீங்கள்தான் தலைமை ஏற்க வேண்டும்! - முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

Anbumani Stalin

Senthil Velan

, திங்கள், 15 ஜூலை 2024 (15:30 IST)
காவிரி பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்டால்தான் காவிரி விவகாரத்தில் தமிழகம் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கர்நாடகத்துக்கும் மற்றவர்களுக்கும் காட்ட முடியும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 8000 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்தக் கூட்டத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று பங்கேற்காமல் ஒதுங்கியிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
 
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கக் கூடிய, காவிரியில் தமிழகத்தின் உரிமையை பறிக்கக் கூடிய செயலை செய்வதற்கான கர்நாடக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையே அம்மாநில முதலமைச்சர் சித்தராமைய்யா தலைமையேற்று நடத்துகிறார். அனைத்துக் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உழவர் அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டவர்களை அழைத்து கலந்தாய்வு நடத்துகிறார்.
 
அதேபோல், தமிழகத்திலும் காவிரி பிரச்சினை குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றால்தான் அதற்கு முக்கியத்துவம் கிடைக்கும். காவிரி பிரச்சினை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடத்தப்பட்டால்தான் காவிரி விவகாரத்தில் தமிழகம் எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை கர்நாடகத்துக்கும் மற்றவர்களுக்கும் காட்ட முடியும்.
 
எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடியை காப்பாற்ற வேண்டும்; தமிழகத்தின் 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டும் போன்ற நோக்கங்களைக் கருத்தில் கொண்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்த வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

 
காவிரி பிரச்சனை தொடர்பாக ஆலோசிக்க சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி, சொமேட்டோ.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!!