அந்த ஸ்லீப்பர் செல் தம்பிதுரையா? - அதிமுகவினர் அதிர்ச்சி
, திங்கள், 16 அக்டோபர் 2017 (11:34 IST)
தினகரன் கூறும் ஸ்லீப்பர் செல் துணை சபாநாயகர் தம்பி துரையா என்கிற சந்தேகம் அதிமுகவினருக்கு எழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் களம் இறங்கிய பின், எங்கள் அணியின் ஸ்லீப்பர் செல் எடப்பாடி அணியில் ஏராளமானோர் இருக்கிறார்கள். சரியான நேரத்தில் அவர்கள் வெளிப்படுவார்கள் என செய்தியாளர்களிடம் தினகரன் தொடர்ந்து கூறிவந்தார்.
சசிகலாவிற்கு ஆதரவாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் செல்லூர் ராஜு அவ்வப்போது கருத்து கூறிவந்தனர். எனவே, அவர்கள்தான் அந்த ஸ்லீப்பர் செல்களா என்கிற சந்தேகம் அதிமுகவில் எழுந்தது. ஆனால், நான் ஸ்லீப்பர் செல் இல்லை என செல்லூர் ராஜு மறுத்தார். தினகரனும் அதை மறுத்தார்.
ஆனால், தொடக்கம் முதலே தினகரன் மற்றும் சசிகலாவிற்கு எதிராக எந்த கருத்தையும் கூறாமல் இருப்பவர் துணை சபாநாயகர் தம்பிதுரைதான். பொதுக்குழுவில் தினகரன் மற்றும் சசிகலாவிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போது கூட அது சரி என அவர் எந்த இடத்திலும் கூறவில்லை. மேலும், “அவர்கள் வந்தால் மீண்டும் ஏற்றுக்கொள்வோம். அவர்கள் விரைவில் எங்கள் அணியில் இணைவார்கள்” எனவும் கூறி எடப்பாடி அணிக்கு கிலியை ஏற்படுத்தினார். அதன் பின் அது அவரின் சொந்த கருத்து என ஜெயக்குமார் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.
அதோடு, அவருக்கு அளிக்கப்பட்ட கொள்கை பரப்பு செயலாளர் பதவியை தினகரன் பறித்து, எம்.எல்.ஏ தமிழ்செல்வனுக்கு கொடுத்தார். அதற்கும் அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்தார்.
அதன்பின் விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் “அதிமுகவில் பிரிந்தவர்கள் இணைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனக் கூறினார். அதற்கு தினகரனுன் வரவேற்கும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார்.
பல வருடங்களாக சசிகலா குடும்பதினருடன் அவர் நெருங்கிய உறவில் இருப்பதால், அவர்களுக்கு ஆதரவாகவே யோசிக்கிறார். அவர்களை எதிர்த்து தம்பிதுரை எங்கேயும் கருத்து சொல்வதில்லை. எனவே, தினகரன் கூறிய ஸ்லீப்பர் செல் அவராகவும் இருக்குமோ என்கிற சந்தேகம் அதிமுகவினரிடையே எழுந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்