கன்னியாகுமரி அருகே முன்விரோதம் காரணமாக காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவான பிரபல ரவுடி உட்பட 6 பேர் கொண்ட கும்பலை போலீசா தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த பாரதபள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜாக்சன். அந்த பகுதியில் டெம்போ ஓட்டி வந்தார். இவரது மனைவி உஷா ராணி. இவர் திருவட்டார் பேரூராட்சி 10 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலாராக உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஜாக்சன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது அவருக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனையடுத்து ஜாக்சன் அருகில் உள்ள தேவாலயம் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு இரண்டு பைக்கில் வந்த 6 பேர் கும்பல் ஜாக்ஸனிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஜாக்சனை சரமாரியாக வெட்டியதுடன் கம்பால் தாக்கியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜாக்சன் கூச்சலிடவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஜாக்சனை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தியதில் ஜாக்சனை வெட்டியது வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த ராஜகுமார் என்ற விலாங்கன் என்பதும் தெரியவந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்பு ஜாக்சனுக்கும், ராஜகுமாருக்கும் இடையே தகராறு நடந்து அடிதடியாக மாறி அந்த வழக்கும் நிலுவையில் உள்ளதும் கண்டறியப்பட்டது.
ஜாக்சன் வெட்டிகொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் கொலையில் தொடர்புடைய நபர்களை தேடி வருகின்றனர். கவுன்சிலர் ஒருவரின் கணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.