சாலை விபத்தில் உயிரிழந்த ஆசிரியை, மாணவி.. நிவாரண உதவி அறிவித்த முதல்வர்..!
, செவ்வாய், 10 டிசம்பர் 2024 (17:54 IST)
காங்கேயம் அருகே வெள்ளகோயில் - செம்மாண்டாம்பாளையம் சாலையில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த சரஸ்வதி மற்றும் ராகவி ஆகியோரது குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ளகோவில் செம்மாண்டாம்பாளையம் பெரியசாமி நகர் அருகில் இன்று (10.12.2024) அகலரப்பாளையம்புதூர் அரசு ஆரம்பப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்துவந்த திருமதி.சரஸ்வதி (வயது 50) க/பெ.கணபதி, அதே பள்ளியில் பயிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அகலரப்பாளையம்புதூரைச் சேர்ந்த மாணவிகள் செல்வி. ராகவி (வயது 10) த/பெ.கார்த்தி மற்றும் செல்வி.யாழினி (வயது 8) த/பெ.கார்த்தி ஆகிய இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது தனக்கு முன்னால் சென்ற டிராக்டரை முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக டிராக்டரின் டிரைலர் மீது மோதிய விபத்தில் திருமதி.சரஸ்வதி மற்றும் செல்வி.ராகவி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செல்வி.யாழினி என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
அடுத்த கட்டுரையில்