சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த சுமார் 3000 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. இந்த கடைகளுக்கு பதிலாக ஊருக்குள் புதிய கடைகள் திறக்கும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தோல்வி அடைந்தது.மேலும் இதுகுறித்து அனைத்து மாநிலங்களுக்கும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மூடப்பட்ட கடைகளில் பணிபுரிந்து வந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப்பணி வழங்கும் நடவடிக்கைகளில் தற்போது அரசு ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மூடிய கடைகளுக்கு, மாற்றாக திறக்கப்பட்ட கடைகள்; மாற்றுக்கடை திறப்பதில் நிலவும் பிரச்னை உள்ளிட்டவை குறித்து, ஒவ்வொரு மாவட்ட மேலாளர்களிடமும் விபரம் கேட்கப்பட்டது. தற்போது, டாஸ்மாக் கடைகளில், அதிகம் பேர் பணிபுரிகின்றனர்.
அவர்களில், இளங்கலை பட்டம் பெற்றவர்கள்; ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆட்படாதவர்கள்; பல ஆண்டு பணிபுரிபவர்களை, விருப்பத்தின் அடிப்படையில், கூட்டுறவு சங்கம் மற்றும் அவை நடத்தும் ரேஷன் கடையில், விற்பனையாளர், எடையாளர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அந்த விபரங்கள் உள்ளடக்கிய படிவங்கள், மேலாளர்களிடம் வழங்கப்பட்டன. அவர்கள், ஊழியர்களிடம் வழங்குவர்; பின், அவர்களை ரேஷன் கடைக்கு மாற்றும் பணிகள் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.