சென்னையில் டாஸ்மாக் பணத்தை கொள்ளையடிக்க நடந்த முயற்சியில் பாதுகாவலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் பணத்தை, டாஸ்மாக் விற்பனையாளர்கள் வங்கியில் செலுத்தி வந்தனர்.
இந்த டாஸ்மாக் விற்பனையாளர்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது.
எனவே, அதைத்ப் பெற்று வங்கியில் செலுத்தும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
"ரேடியல் கேஷ் மேனேஜ்மெண்ட்" என்ற அந்த நிறுவனம் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள்களின் துணையுடன் பணத்தைப் பெற்று வங்கியில் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில், அந்த நிறுவன ஊழியர்கள் அனகாபுத்தூர் தேவராஜ் நகரை சேர்ந்த மோகன்பாபு, ஆவடி மிட்னமல்லி எம்.ஆர்.நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராஜேந்திரன், அண்ணாநகர் நடுவாங்கரையை சேர்ந்த டிரைவர் வினேத்குமார் ஆகியோர் ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள டாஸ்மாக் கடைகளிலிந்து ரூ.40 லட்சம்த்தை பெற்றனர்.
இதைத் தொடர்ந்து, கொளத்தூர் செந்தில்நகரில் உள்ள மதுக்கடைக்கு சென்றனர். மதுக்கடை அருகே அவர்கள் சென்ற கார் நின்றது.
அப்போது, மோகன்பாபு என்பவர் பணத்தைப் பெறுவதற்காக கடைக்குச் சென்றார். பாதுகாவலர் ராஜேந்திரன், டிரைவர் வினோத்குமார் ஆகியோர் காரிலேயே இருந்தனர்.
இந்நிலையில், 3 மர்ம நபர்கள் திடீரென காரில் இருந்த ராஜேந்திரன் மீது மிளகாய் பொடியை தூவினர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் வினோத்குமார் காரிலிருந்து இறங்கி ஓடினார்.
அந்த மர்ம நபர்கள் வீசிய மிளகாய்ப் பொடி கண்களுக்குள் புகுந்ததால், ராஜேந்திரனால் தனது துப்பாக்கியை எடுத்து சுட முடியாமல் தவித்தார்.
அப்போது, அந்த கும்பல், ராஜேந்திரனை கத்தியால் சரமாரியாக குத்தினர், அவரது தோள்பட்டை, கழுத்து, கை, கால், மார்பு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்து விழுந்தது.
இதனால், ராஜேந்திரன் ரத்தம் சொட்டச் சொட்ட காரில் இருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடினார்.
இதைத் தொடர்ந்து, காரில் இருந்த ரூ.40 லட்சம் ரொக்கப் பணத்தை அந்த கும்பல் எடுக்க முயன்றபோது அங்கிருந்த பொதுமக்கள் அந்த கும்பலை விரட்டியதால், பணத்தை கொள்ளையடிக்க முடியாமல் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
அப்போது, உயிருக்குப் போராடியபடி துடித்துக் கொண்டிருந்த ராஜேந்திரனை, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஒடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.