வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நெருங்குவதால் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மழைப்பொழிவு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக பகுதியிலிருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் உள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக இன்று தமிழக கடற்கரையோர பகுதிகளின் அனேக இடங்களில் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
7-ந்தேதி கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.