மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அதிகாரிகள் இன்று டெல்லி செல்கின்றனர்.
125 ஆண்டுகளாக நீடித்து வரும் காவிரி நதிநீர் தொடர்பான வழக்கில் கடந்த பிப்ரவரி 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு கர்நாடாகாவிற்கு ஆதரவாக இறுதித் தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அந்த கெடு வரும் 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் கடந்த 9-ந் தேதி மத்திய நீர் வளத்துறை அமைச்சக அதிகாரிகள் தமிழகம், கர்நாடகா அதிகாரிகளை அழைத்து பேசினர். அதில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது. கர்நாடகா அரசு தனது எழுத்துப்பூர்வமான பிரமாணப் பத்திரத்தை அந்த மாநில தலைமைச் செயலாளர் மூலமாக பதிவு செய்தது.
இதனைத்தொடர்ந்து தமிழக அரசு தங்களது தரப்பு கோரிக்கை மனுவை மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் சமர்பிக்க உள்ளது. அதற்காக தமிழக பொதுத்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் சில அதிகாரிகள் இன்று டெல்லிக்கு செல்கிறார்கள்.