இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவுவதற்காக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பை கண்டுள்ளது. மக்கள் உணவு பொருட்களுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து மக்கள் பலர் படகுகள் வழியாக தமிழகம் தப்பி வருவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இலங்கைக்கு இந்திய அரசு பொருளுதவி மற்றும் கடனுதவியும் செய்து வருகிறது. இருந்தாலும் தமிழ்நாடு அரசு அங்குள்ள இலங்கை தமிழர்களுக்கு தேவையான அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்குவதற்காக மத்திய அரசின் அனுமதியை கோரியிருந்தது.
இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தும் எந்த பதிலும் வரவில்லை. இந்நிலையில் இலங்கை தமிழர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதில் ” இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகி இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டில் இருந்து உடனடியாக அனுப்பி வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து, உரிய அனுமதிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.