தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையிலும் தொடர்ந்து பல பகுதிகளில் மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. சில நாட்களுக்கு முன்னதாக சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் 100 டிகிரியை தொட்டது. இந்நிலையில் சமீப காலமாக பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருவது மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையின் திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர், வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து பல பகுதிகளில் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பல பகுதிகளில் ஐஸ் கட்டியுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. வாணியம்பாடி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் நல்ல கனமழை பெய்துள்ளது. தென் மாவட்டங்களில் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. கோடை வெயிலுக்கு நடுவே பெய்த குளுகுளு மழை மக்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.