தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியான நிலையில் கடந்த மே 8 முதல் 22ம் தேதி வரை தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வந்தன. 164 அரசு கல்லூரிகளில் உள்ள 1,07,395 இடங்களுக்கு சுமார் 3 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்தந்த கலை அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வருகின்ற மே 30ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரை முதல்கட்ட பொது கலந்தாய்வும், ஜூன் 12 முதல் 20ம் தேதி வரை இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வும் நடைபெற உள்ளது.
கலந்தாய்வில் கலந்து கொள்ள உள்ள மாணவர்களுக்கு அலைபேசி வழியாகவும், குறுஞ்செய்தி வழியாகவும் கலந்தாய்வு அழைப்பு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுகள் முடிந்த பின்னர் ஜூன் 22ம் தேதி இளங்கலை வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.