தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழைப் பொழிவை ஆராய்ந்து மாவட்ட வாரியாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வானிலை துறையில் சார்பில் கடந்த ஆண்டு பெய்துள்ள மழை மற்றும் அது சராசரி அளவை விட அதிகமா அல்லது குறைவா என்று அலசி ஆராயப்பட்டு விரிவான அறிக்கையாக கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. அதில் தமிழகம் மற்றும் பாண்டியில் பதிவான தென்மேற்குப் பருவமழையின் அளவு 28 செ.மீ. இது சராசரி அளவை விட 12 % குறைவு எனவும் வடகிழக்குப் பருவமழயின் பதிவான அளவு 34 செ.மீ.இது சராசரியை விட 24% குறைவு.எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள பகுப்பாய்வில் தமிழகத்தில் கடந்த ஆண்டி வடகிழக்குப் பருவமழையின் அளவு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் ‘கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள 38 பகுதிகளில் மழைப்பொழிவு பற்றாக்குறை அல்லது மிகப்பற்றாக்குறை என்ற அளவில் பெய்துள்ளது. எனவே அந்தப் பகுதிகளை வறட்சி வட்டாரங்களாக அறிவித்துள்ளனர்.
மேலும் சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், நாமக்கல், விருதுநகர், காஞ்சிபுரம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், நாகை, கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் போதிய அளவு மழைப்பொழிவு இல்லாததால் அவை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்த ஆண்டு கோடையை தமிழகம் எப்படி சமாளிக்கப்போகிறது என்ற கவலை எழுந்துள்ளது. ஆனால் ஒரே நிம்மதியாக இந்த ஆண்டு கோடை மழை பெய்யும் என வானிலை ஆயுவு மையம் தெரிவித்துள்ளது.