சென்னையில் நிலவி வந்த குடிநீர் பஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து வருவதால் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு சப்ளை செய்யப்பட்ட தண்ணீர் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் முதல் சென்னை கடுமையான தண்னீர் பஞ்சத்தை சந்தித்து வந்தது. குடிநீருக்கே பெரும் தட்டுபாடு ஏற்பட்டதால் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது.
கடந்த ஜூலை முதல் 25 லட்சம் லிட்டர் தண்ணீரை சுமந்து கொண்டு ரயில் ஒன்று சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. தேவை அதிகரித்ததன் பொருட்டு 25 லட்சம் லிட்டர் கொண்டு வரக்கூடிய மற்றொரு ரயிலும் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் சென்னைக்கு தினமும் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் உபயோகத்திற்காக கொண்டு வரப்பட்டது.
தற்போது கிருஷ்ணா அணையில் நிறைய தண்ணீர் நிரம்பியுள்ளதால் தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால் வீராணம் மற்றும் பூண்டி ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தேவையான அளவு தண்ணீர் ஏரிகளிலிருந்து பெறப்படுவதால் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் இயக்க தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சென்னைக்கு கடைசி முறையாக ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் ரயில் கிளம்பியபோது அதிகாரிகள் பூஜை செய்து அனுப்பி வைத்தனர். ஜோலார்பேட்டையிலிருந்து கடந்த மூன்று மாதங்களாக எந்தவித தடையும் இல்லாமல் தண்ணீர் வழங்க ஆதரவு தந்ததற்கு ஜோலார்பேட்டை மக்களுக்கு அதிகாரிகளும், சென்னை மக்களும் நன்றிகளை தெரிவித்தனர்.